நமது முந்தைய பதிவில், உடல் கொழுப்புடன் தொடர்புடைய பல விடயங்களைப் பார்த்தோம். இனி உடல் பருமனை குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது பற்றி பார்ப்போம்.  இது இரண்டு பகுதிகளாக அணுகப்பட வேண்டும். உணவு மற்றும் உடல்பயிற்சி என்பனவே அவை. இதில் எது முக்கியமானது என்றால், இரண்டுமே மிகவும் முக்கியமானவை. வெறும் உணவுக் கட்டுப்பாடு மாத்திரமோ அல்லது உடல் பயிற்சி மாத்திரமோ நமக்கு தேவையான பெறுபேற்றினை தந்துவிடுவதில்லை. இன்றைய பதிவில் இது தொடர்பாக மேலும் சில விவரங்களைப் பார்ப்போம்.

நாம் உட்கொள்ளும் உணவானது, உடலில் சமிபாடடைந்த பின்னர் சக்தியாக மாறுகிறது. இது கலோரி எனும் அலகில் அளக்கப்படும். நாம் உட்கொள்ளும் கலோரி அளவு நமது வருமானம் போன்றது. அன்றாட வாழ்கையில் நமது உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தி இங்கிருந்தே பெறப்படுகிறது. உடல் எடை, வயது போன்ற காரணிகளுக்கமைய,  ஒரு நாள் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை ஒண்ணுமே பண்ணாம சும்மாவே உட்காந்திருக்க எவ்வளவு சக்தி செலவாகுமோ அந்த அளவு சக்தி BMR (Basal metabolic rate) எனப்படும். இது வீட்டு வாடகை போன்றது. இதற்க்கு மேல், நமது அன்றாட செயல்பாட்டுக்கு தக்கதாக மேலதிகமாக சக்தி பயன்படுத்தப்படும். இவை, மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம், சினிமா டிக்கட் முதலிய ஏனைய செலவுகள் போன்றது. வரவு அதிகமா இருந்தா சேமிப்பு இருக்கும். உடலை பொறுத்தவரை இந்த சேமிப்பு பெரும்பாலும் முந்தய பதிவில் சொன்ன கொழுப்பு வடிவிலேயே அமையும்.

அதாவது உடல் கொழுப்பினை குறைப்பது மிகவும் எளிதானது. உங்கள் உணவு பட்ஜெட்டில் துண்டுவிழும்போது துண்டு விழும் தொகையை ஈடு செய்ய, உடல், சேமிப்பிலிருக்கும் கொழுப்பினை கரைக்கும். துண்டு விழும் தொகைக்கு ஏற்ப சேமிப்பு கரையும் அளவும் மாறுபடும். இது இரு வகைகளில் சாத்தியமாகலாம். ஒன்று நமது வருமானத்தை குறைப்பதன் மூலம், அதாவது உட்கொள்ளும் கலோரி அளவினை குறைப்பதன் மூலம், இரண்டாவது செலவினை அதிகரிப்பதன் மூலம், அதாவது உடல் செயல்பாட்டினை அதிகரிப்பது, அல்லது உடல்பயிற்சி செய்வது மூலம்.

ஒரு கிலோ கொழுப்பை கரைக்க அண்ணளவாக 7750 கலோரி குறைக்க வேண்டும். ஒரு மனிதனது அன்றாட உணவு சராசரியாக 2000 கலோரி உடையாதாக இருக்கும். 75 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் மணிக்கு 8 மைல் வேகத்தில் ஒரு மணிநேரம் ஓடினால் 850 கலோரி உபயோகப்படுத்துவான். இப்போ ஒரு வாரத்தில் 10 கிலோ எடை குறைப்பு செய்கிறேன் பேர்வழி என இறங்கினால், எந்த உணவும் உட்கொள்ளாது, ஒரு நாளைக்கு தினமும் 10-11 மணிநேரம் 8 மைல் வேகத்தில் ஒரு வாரத்துக்கு ஓடினால் அது சாத்தியமாகும். இந்த கணக்கு சரிப்பட்டு வருமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க. வாரம் ஒரு பவுண்டு எடைக்குறைப்பு அல்லது ஒரு நாளைக்கு 500 கலோரி வித்தியாசம் என்பதே நடைமுறை சாத்தியமான, நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய எடைக் குறைப்பிற்கு வழிவகுக்கும். இது ஏன் என இப்போது பார்ப்போம்.

மனித உடலினது தொழில்களில் அடிப்படையானது போதிய உணவு கிடைக்காத போதும் பல நாட்களுக்கு உயிர் வாழ தேவையான சக்தியை சேகரிப்பதும் அதற்கமைய தனது செயல்பாடுகளை மாற்றிக் கொள்வதும் ஆகும். இப்போ எடை குறைக்கிறேன் பேர்வழி என காலை உணவையோ, இரவு உணவையோ நாம் கைவிடுகிறோம், அல்லது மிக அதிக அளவில் கலோரி குறைப்பு செய்கிறோம் என வைத்துக்கொள்ளுங்கள், உடலானது உணவு கிடைக்கும் வேளையில் அதனைப் பயன்படுத்தாது சேமிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டும். கொழுப்பு கரைக்க முற்படும் முன்னர், அன்றாட செயல்பாட்டிற்கு தேவையான சக்தி/உணவு (BMR) தொடர்ச்சியாக கிடைக்கும் என்பதை உடல் நம்ப வேண்டும், அப்போதுதான் சேமிப்பை முன்னிறுத்துவதை விட்டும், சேமிப்பை உபயோகிக்கும் நிலைமைக்கு உடல் மாறும். இன்கம் செக்யூரிட்டி இல்லாத நிலையில், நாம் செலவுகளில் ஈடுபடுவதை விட, கிடைக்கும் பணத்தை சேமிக்கவே அதிகம் ஆர்வம் காட்டுவோம், நமது உடலும் இது போன்றதுதான்.

இரண்டாவதாக, நமது முன்னைய பதிவில் பார்த்தது போன்று, உடலில் சக்தியை செலவழிக்கும் மிக முக்கிய இயந்திரம் உடல் தசைகள் ஆகும். போதியளவு வருமானம் கிடைக்காதபோது, நாம் அதிக செலவு தரக்கூடிய விடயங்களை கைவிடுவதைப் போல, நமது உடலும், கொழுப்பினை கரைப்பதற்கு பதிலாக, உணவு பட்ஜெட்டில் அதிக செலவு தரக்கூடிய தசைகளை இழக்க முற்படும். இதனால் எடை குறைந்த போதும், உடல் பருமன் பெரியளவில் குறையாது, அதே போன்று உடல் வலுவும் காலப்போக்கில் குன்றும், இது ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அழகியலும் பாதிக்கப் படும், அதாவது உடல் எடை குறைந்தாலும் தொப்பை குறையாது, கொழுப்பு சதவீதம் அதிகரிப்பதால் உடல் மேலும் பார்பதற்கு அழகற்றதாக தெரியும்.

மூன்றாவது முக்கிய காரணம், பெரிய அளவில் கலோரி வித்தியாசத்தை ஏற்படுத்தும் போது, முதல் சிறிது காலங்களுக்கு நல்ல பெறுபேறு கிடைப்பதைப் போல் தோன்றினாலும், காலப்போக்கில் உடலானது கொழுப்பை இயன்றவரை சேமிப்பதற்கான முயற்சியில், நமது உள்ளுறுப்புகளின் அன்றாட செயல்பாட்டினை குறைப்பதன் மூலம் BMR இனை குறைக்கும்.  அடுத்த கட்டமாக சோர்வு, அயர்ச்சி போன்றவற்றின் மூலமாக நமது மொத்த உடல் செயல்பாட்டினையும் மந்தப் படுத்தும். இப்போது நாம் குறைந்த அளவு கலோரியே உட்கொண்ட போதும், செலவினை கட்டுப்படுத்துவதன் மூலம் உடலானது மறுபடியும் சேமிக்க ஆரம்பிக்கும் அல்லது எடை குறையும் வீதத்தை கட்டுப்படுத்தும். இது மெடாபோலிக் பிரேக் டவுன் எனப்படும். இதுவே உடல் எடையினை துரிதமாக குறைக்கும் பலரும், சிறிது காலத்தின் பின்னர் குறைத்த எடையை, அல்லது அதை விட அதிக எடையை மீண்டும் அடைவதற்கும் காரணமாகும்.

உடல் பருமனை குறைக்க, உடலில் சேமிக்கப் பட்டிருக்கும் கொழுப்பை குறைக்கவேண்டும் என கடந்த பதிவில் பார்த்தோம், உடல் எடைக் குறைப்பு என்பது 100% கொழுப்பு குறைப்பாக மட்டுமே இருக்காது, உடலிலுள்ள நீர் எடை, கொழுப்பு எடை, தசை எடை எனும் மூன்றும் குறையும். இவற்றுள் ஆரோக்கியமான முறையில் பருமனை குறைக்க, கொழுப்பு எடை குறைப்பே முக்கியமாகும். உங்களது BMR என்ன (கீழே BMR கால்குலேட்டர் இணைக்கப்பட்டுள்ளது), ஒரு நாளைக்கு என்னென்ன உணவு உட்கொள்கிறீர்கள், எவ்வளவு உணவு உட்கொள்கிறீர்கள் போன்ற விபரங்களை குறித்து வையுங்கள். ஏனைய இரண்டு எடைக் குறைவையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது, கொழுப்பு எடை குறைப்பை எவ்வாறு அதிகப்படுத்துவது போன்ற விடயங்களை இனி வரும் பதிவில் பார்ப்போம்.